இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி: போலீசார் தேடிய வாலிபர் ஏரியில் பிணமாக மீட்பு


இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி: போலீசார் தேடிய வாலிபர் ஏரியில் பிணமாக மீட்பு
x

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் 2 நாட்களுக்கு பின்னர் போரூர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.

போருர்,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 29). இவருக்கும் சென்னை வடபழனியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவருக்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிஷாந்த் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம் பெண்ணின் சொத்தை விற்று ரூ.68 லட்சம் வரை பணம் பெற்று கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே நிஷாந்துக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நடைபெற இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாட்ஸ்-அப்பில் தகவல்

இதையடுத்து தொழிலதிபர் தனது மகளுக்கு நிஷாந்துடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போக்சோ, பெண் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தனது நண்பரின் காரை வாங்கி கொண்டு சென்ற அவர், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், தான் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்து இருந்தார். இதனால் அதிர்ச்சியடடைந்த நண்பர்கள் போரூர் ஏரிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது போரூர் மேம்பாலத்தில் நிஷாந்த் ஓட்டிச்சென்ற கார் மட்டும் தனியாக நின்றது. அவர் மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

ஏரியில் தேடும் பணி

இதுகுறித்து அறிந்த போரூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீச்சல் வீரர்களின் உதவியுடன் கடந்த 2 நாட்களாக போரூர் ஏரியில் நிஷாந்தை தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் ஏரியில் நிஷாந்தின் உடல் ஏதும் கிடைக்காததால் நேற்று முன்தினம் ஏரியில் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினார்கள். எனவே உண்மையிலேயே அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கைது நடவடிக்கைக்கு பயந்து தற்கொலை நாடகம் ஆடிவிட்டு வேறு எங்காவது தப்பி ஓடி விட்டாரா? என்ற சந்தேகமும் போலீசார் தரப்பில் எழுந்தது.

பிணமாக உடல் மீட்பு

இந்நிலையில் நேற்று காலை போரூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பிணமாக மீட்கப்பட்டவர் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.68 லட்சம் மோசடி செய்து போலீசாரால் தேடப்பட்டு வந்த நிஷாந்த் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தான் காதலித்த பெண்ணால் தனது திருமணம் நின்று போனதால் மனமுடைந்த நிஷாந்த், போலீஸ் விசாரணைக்கு பயந்து மோசடி வழக்கில் தன்னை சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தற்கொலை முடிவை எடுத்து விட்டதாக அவரது நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story