ஏலச்சீட்டு நடத்தி ரூ.6½ கோடி மோசடி; தம்பதி கைது


ஏலச்சீட்டு நடத்தி ரூ.6½ கோடி மோசடி; தம்பதி கைது
x
தினத்தந்தி 31 Jan 2023 12:30 AM IST (Updated: 31 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே, ஏலச்சீட்டு நடத்தி ரூ.6½ கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பூதிபுரம் அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 65). இவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், பூதிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகள் சுகன்யா (30), அவருடைய கணவர் பொன்ராஜ் (40), உறவினர்கள் பரமேஸ்வரி, தினேஷ், சரண்யா, சூர்யா உள்பட 8 பேர் இருந்தனர்.

நானும், குரும்பபட்டி, பூதிபுரம், சமுத்திரப்பட்டி, முனியகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரும் ஆறுமுகத்திடம் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தினோம்.

இந்த நிலையில் ஏலச்சீட்டுக்கான காலக்கெடு முடிந்தும் எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் அதற்கான வட்டித்தொகையை மட்டும் ஆறுமுகம் கொடுத்து வந்தார். இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே கிராம மக்களிடம் இதுகுறித்து விசாரித்தேன். அப்போது அவர்களுக்கும் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டுக்கான பணத்தை கொடுக்காமல் வட்டித்தொகையை மட்டும் கொடுத்துவிட்டு ஆறுமுகம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தம்பதி கைது

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ராஜசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, ராஜகோபால் மற்றும் போலீசார் அந்த கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆறுமுகம் ஏலச்சீட்டு நடத்தி 4 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பணம் பெற்று ரூ.6½ கோடி வரை மோசடி செய்ததும், போலீசார் வருவது குறித்து தகவல் அறிந்ததும் அவர் தலைமறைவானதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆறுமுகம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், ஆறுமுகத்தின் மகள், மருமகனை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் ஆறுமுகம் எங்கு பதுங்கி இருக்கிறார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story