வங்கியில் கடன் வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
வங்கியில் கடன் வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் மோசடி செய்த மோசடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கூட்ஸ்செட் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனது மனைவியுடன் சேர்ந்து சொந்தமாக நிறுவனம் நடத்த முடிவு செய்து, அதற்காக வங்கியில் கடன் பெற முயற்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தனது நண்பர் மூலமாக செல்வம், தினேஷ்குமார், கண்ணன் ஆகியோர் அவருக்கு அறிமுகமானார்கள். வங்கியில் இருந்து ரூ.30 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறிய 3 பேரும் இதற்காக பிரகாசிடம் இருந்து காசோலை, ஆதார்கார்டு போன்றவற்றை பெற்றுச்சென்றனர்.
இதற்கிடையில் தியாகராயநகரில் உள்ள வங்கி மூலம் பிரகாசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5½ லட்சம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், தன்னிடம் காசோலை வாங்கி சென்ற செல்வம், தினேஷ்குமார், கண்ணன் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர்களின் செல்போன் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இந்த மோசடி குறித்து ஆதம்பாக்கம் போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோசடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.