திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி; உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர் கைது


திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி; உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர் கைது
x

ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்த நிலையில் 4-வது திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த நபர், உல்லாசமாக வாழ்ந்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

திருமணம் செய்ய விருப்பம்

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வசித்து வரும் 35 வயது இளம்பெண் ஒருவர், திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தற்போது 2-வது திருமணம் செய்து கொள்ள வரன் தேடி வந்தார். இதற்காக மணமகன் தேவை என ஆன்லைனில் பதிவு செய்து இருந்தார்.

இதை பார்த்து, கடந்த ஜூன் மாதம் ஹபீப் ரகுமான் (வயது 38) என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டார். "எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எனது மனைவி இறந்து விட்டார். நான் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருகிறேன். உங்களை 2-வதாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

அதற்கு அவர் நேரில் வரும்படி கூறியதால், ஹபீப் ரகுமான் விலை உயர்ந்த சொகுசு காரில் பந்தாவாக சென்று பேசினார். அப்போது, "எனக்கு ஒரு அக்காள் மற்றும் ஒரு அண்ணன் இருக்கிறார்கள். அண்ணன் கனடாவிலும், அக்காள் ஆசிய நாட்டில் உள்ள புரூனேவில் இருப்பதாகவும்" கூறினார்.

அழகான பேச்சு, அமைதியான குணம், நல்ல மனிதர் போல இருப்பதாக நினைத்த பெண்ணும், அவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அதற்கு அவர், "எனது அக்கா ஜூலை மாதம் சென்னைக்கு வருவதால் வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம்" என கூறிவிட்டு சென்றார்.

ரூ.36 லட்சம்

அதன்பிறகு 3 நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்ட ஹபீப் ரகுமான், தனக்கு அவசரமாக ரூ.60 ஆயிரம் வேண்டும் என கேட்டார். அவரும் ஆன்லைன் மூலம் அந்த பணத்தை அனுப்பி வைத்தார்.

பின்னர் 5 நாட்கள் கழித்து, தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தின் மீது கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அதனை முடிக்க ரூ.10 லட்சம் தேவை. வழக்கு முடிந்தால் அதனை விற்று திருமணத்துக்கு பிறகு இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பிய ெபண், வருங்கால கணவர் தானே கேட்கிறார் என்று நினைத்து ரூ.10 லட்சத்தை நேரில் அழைத்து கொடுத்தார். இவ்வாறு பழகிய 30 நாட்களில் சிறுக சிறுக ரூ.36 லட்சம் மற்றும் 13 பவுன் நகையை வாங்கிய ஹபீப் ரகுமான் அதன்பிறகு மாயமாகி விட்டார். அவரது செல்போனையும் 'சுவிட்ச்ஆப்' செய்துவிட்டார்.

ஏற்கனவே 3 மனைவிகள்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், 3 மாதமாக பல இடங்களில் ஹபீப் ரகுமானை தேடியும் அவர் கிடைக்காததால் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து தாம்பரம் உதவி கமிஷனர் சிபி சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் பூந்தமல்லியில் மனைவியுடன் இருந்த ஹபீப் ரகுமானை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ஹபீப்ரகுமான், ஏற்கனவே 3 பெண்களை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதும், 4-வதாக இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்றதும் தெரிந்தது. தற்போது 3-வது மனைவியுடன் பூந்தமல்லியில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

உல்லாச வாழ்க்கை

ஹபீப்ரகுமான், இதுேபால் கணவரால் கைவிடப்பட்டவர்கள், கணவரை இழந்தவர்கள் மற்றும் மணமகன் தேவை என ஆன்லைனில் விளம்பரம் செய்பவர்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளாமல் நகை, பணத்தை பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

இந்த மோசடி பணத்தில் விலை உயர்ந்த கார், ரூ.50 ஆயிரத்தில் கைக்கடிகாரம், விலை உயர்ந்த துணிமணிகள் வாங்கி உள்ளார். மேலும் மாதத்தில் 10 நாட்களுக்கு கோவா மற்றும் மசாஜ் செய்து கொள்ள கேரளா என சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது

அவரிடம் இருந்து விலை உயர்ந்த கைகடிகாரம், கார், 2 பவுன் தங்க நகையை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். பெண்ணிடம் வாங்கிய ரூ.36 லட்சம் குறித்து போலீசார் கேட்டபோது, அதனை செலவு செய்து விட்டதாக சிரித்தபடி கூறி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தான் புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் மோசடியில் ஈடுபட்ட நபரை பிடித்த போலீசார், தனது ரூ.36 லட்சம் மற்றும் 13 பவுன் நகையையும் மீட்டு தரும்படி அந்த பெண் கூறினார்.


Next Story