தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி
நாங்குநேரியில் தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரியில் தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.20 லட்சம் மோசடி
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு ஆன்லைனில் பெண் ஒருவர் பழக்கம் ஆனார். அந்த பெண், நான் வெளிநாட்டில் உள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அனுப்புகிறேன். அதனை வாங்கி பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த தொழிலாளி, தனது முகவரிகளை அனுப்பி உள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு விமான நிலையத்தில் இருந்து அதிகாரி பேசுவது போல் பேசி, விலைஉயர்ந்த பொருட்கள் பெற வேண்டும் என்றால் அதற்கான வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இவரும் அதற்காக சுமார் ரூ.20 லட்சத்தை அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார்.
இரட்டிப்பு பணம்
அதேபோல் நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஜெபராஜ் என்பவர் செல்போன் செயலியில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதற்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி சுமார் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் வரை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த 2 சம்பவம் குறித்தும் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.