புதையலில் கிடைத்த தங்கம் என்றுகூறி தனியார் நிறுவன ஊழியரிடம் பித்தளை நாணயங்களை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி


புதையலில் கிடைத்த தங்கம் என்றுகூறி தனியார் நிறுவன ஊழியரிடம் பித்தளை நாணயங்களை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி
x

தான் புதையல் தேடி எடுப்பவர் என்றும் செஞ்சிக்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு புதையல் தேடியபோது தங்க நாணயங்கள் புதையலாக தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் மகன் சிலம்பரசன் (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் என்பவர் மூலமாக ஒருவர் பழக்கமானார். அப்போது அந்த நபர், தான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி என்றும் தன்னுடைய பெயர் சத்தியமூர்த்தி (45) என்றும் அறிமுகம் செய்துகொண்டார். மேலும் சத்தியமூர்த்தி, சிலம்பரசனிடம், தான் புதையல் தேடி எடுப்பவர் என்றும் செஞ்சிக்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு புதையல் தேடியபோது தங்க நாணயங்கள் புதையலாக தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.

இதை முதலில் சிலம்பரசன் நம்பாத நிலையில் அவருக்கு சத்தியமூர்த்தி, 4 நாணயங்களை கொடுத்து பரிசோதித்துக் கொள்ளுமாறும், தங்கமாக இருந்து உறுதி செய்தால் தன்னிடம் இருந்து மீதமுள்ள தங்க நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி விலை பேசியுள்ளார்.

அதன்படி சிலம்பரசனை சென்னையில் வைத்து சத்தியமூர்த்தி சந்தித்து, 4 நாணயங்களை கொடுத்துள்ளார். அதைப்பெற்ற சிலம்பரசன், அந்த நாணயங்களை தனக்கு தெரிந்த நகைக்கடை ஒன்றுக்கு கொண்டு சென்று பரிசோதித்து பார்த்ததில் அந்த நாணயங்கள் தங்கம் என உறுதி செய்யப்பட்டது.

இதனால் மகிழ்ச்சியடைந்த சிலம்பரசன், சத்தியமூர்த்தியை தொடர்புகொண்டு தனக்கு தங்க நாணயங்கள் வேண்டும் என்றும் அதற்குரிய தொகையை தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு சத்தியமூர்த்தி, தன்னிடம் 600 தங்க நாணயங்கள் இருப்பதாகவும், ரூ.10 லட்சத்தை கொடுத்தால் அனைத்து தங்க நாணயங்களையும் தருவதாக கூறிய சத்தியமூர்த்தி, விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டுச்சாலைக்கு வரும்படியும் அங்கு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு தங்க நாணயங்களை தருவதாகவும் கூறினார்.

அதன்படி நேற்று மாலை சென்னையில் இருந்து சிலம்பரசன், கோலியனூர் கூட்டுச்சாலைக்கு வந்தார். அங்கு சத்தியமூர்த்தியை சந்தித்த சிலம்பரசன், ரூ.10 லட்சத்தை எடுத்து சத்தியமூர்த்தியிடம் கொடுத்து 600 தங்க நாணயங்களையும் பெற்றார். பின்னர் அந்த தங்க நாணயங்களை சிலம்பரசன், விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கொண்டு சென்று பரிசோதித்து பார்த்ததில் அனைத்து நாணயங்களும் பித்தளை நாணயங்களாக இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான், தங்க நாணயங்கள் என்றுகூறி பித்தளை நாணயங்களை கொடுத்து தன்னிடம் சத்தியமூர்த்தி பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிலம்பரசன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு பணத்தை மோசடி செய்த சத்தியமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story