உளுந்தூர்பேட்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.91¾ லட்சம் மோசடி - 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91¾ லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை கிராமத்தை சேர்ந்தவா் செல்வம் (வயது 52). கிராம நிர்வாக உதவியாளர். இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பி.எம்.எஸ். அலுவலத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு இளநிலை உதவியாளராக தண்டையார்பேட்டையை சேர்ந்த வேலு மகன் சிவா (40) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது சிவாவுக்கும், செல்வத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் செல்வம், சிவாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனக்கு பல உயர் அதிகாரிகளை தெரியும். எனவே உங்களுக்கு தெரிந்த யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் கூறுங்கள். நான் வாங்கி தருகிறேன்.
ரூ.91¾ லட்சம் மோசடி
ஆனால் அதற்கு பணம் தரவேண்டும் என சிவா கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய செல்வம் தன்னுடைய மகள், மகன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.13 லட்சத்தை கடந்த ஏப்ரல் 9-ந்தேதி சிவாவிடம் கொடுத்துள்ளார். மேலும் செல்வம் தனது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 71 பேரிடம் ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 600-ஐ வாங்கி சிவாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் செல்வத்தின் மகள், மகன் உள்பட 73 பேருக்கும் சிவா வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இந்த மோசடிக்கு சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் ரமேஷ் (49) என்பவர் உடைந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வம் எலவானாசூர்கோட்டை போலீஸ் நி்லையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சிவா, ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.