ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி: பெண்ணிடம் ரூ.10 லட்சம் சுருட்டிய இருவர் கைது
ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி, பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த இருவரை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், யூடியூப்பில் சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் கொடுப்பதாகவும் கூறி கும்பல் வலை விரித்துள்ளது. வலையில் விழுந்த அப்பெண்ணை, டாஸ்க் என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்ய வைத்த அந்த கும்பல், டாஸ்க் முடிந்தவுடன் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இவ்வாறு, ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை இழந்த அப்பெண், போலீசில் புகாரளித்தார். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி ராகவன் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் குமார் ஆகிய இருவர் பெண்ணிடம் மோசடி செய்தது தெரியவர, இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
செல்போன் சிக்னலின் அடிப்படையில் இருவரும் கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கேரளாவின் பாலக்காட்டிற்கு விரைந்த கரூர் சைபர் கிரைம் போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.