மோசடி வழக்கு:நியோமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மோசடி வழக்கு:நியோமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்-  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மோசடி வழக்கில் நிேயாமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மோசடி வழக்கில் நிேயாமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நியோமேக்ஸ் நிறுவனம்

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் பேரின் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பழனிசாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்களது நிறுவனம் மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் உள்பட பலர் உள்ளனர். நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன. எங்களது நிறுவனம் மொத்தமாக நிலங்களை விலைக்கு வாங்கி, நகரமைப்பு இயக்குனர் அலுவலக அனுமதி பெற்று குறைந்தபட்சம் 1000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு தனி மனைகளாக விற்பனை செய்கிறது. இந்த நிலையில், எங்களது நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து எங்களது வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு அதற்கான ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி தலைமையில் குழு

நிறுவனத்துக்கு சொந்தமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் ஏராளமான நிலங்கள் உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சினையை சரிசெய்ய விரும்புவதால், இதற்கு தீர்வு காண ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்குகள் முடக்கம்

இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை தொடக்கநிலையில்தான் உள்ளது. விசாரணை முழுமையாக நடைபெற இன்னும் 6 மாதங்கள் தேவைப்படும். 557 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள், நிர்வாகிகள் தற்போதுதான் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 9428 சொத்துக்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமனம் செய்வது தேவையற்றது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

முதலீட்டாளர்கள் பட்டியல்

ஆனால், தங்கள் நிறுவனத்தின் முழுத்தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ளன. முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் விவரங்கள், மேலும் நிலங்கள், வீட்டுமனை விவரங்களும் உள்ளன. அத்துடன் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை, வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story