போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேருக்கு வேலை வழங்கி மோசடி


போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேருக்கு வேலை வழங்கி மோசடி
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:46 PM GMT)

மத்திய அரசு பணியில் சேர்த்தது போல் போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேரிடம் மோசடி செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீஸ் தேடுகிறது.

கன்னியாகுமரி

புதுக்கடை,

மத்திய அரசு பணியில் சேர்த்தது போல் போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேரிடம் மோசடி செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீஸ் தேடுகிறது.

வேலை வாங்கி தருவதாக...

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் நேசமணி மகன் ரசல்ராஜ் (வயது 49). இவருக்கும், புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயன் பிரபு (39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தனக்கு தொடர்புள்ளதாக ஜெயன்பிரபு கூறியுள்ளார்.

அதோடு நின்றுவிடாமல் வருமான வரித்துறை, ெரயில்வே துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகள் உதவியுடன் உடனடியாக வேலை வாங்கி தரலாம் எனவும் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ரசல்ராஜ் தனக்கு வேண்டியவர்களான கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஸ்டெம், பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சி செல்லத்துரை, திக்கணங் கோடு பகுதியை சேர்ந்த எபிரேம், தொழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்தார். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதற்கான ஏற்பாடுகளை ஜெயன் பிரபு செய்வதாக கூறி சென்னையை சேர்ந்த சாய் பிரசாத், இன்பா, அவரது சகோதரி ரதிமீனா, தாய் ரத்தினபாய் ஆகியோரை சந்திக்க வைத்தார். அவர்களும் அரசு வேலை ஆசை காட்டி இனிக்க, இனிக்க பேசி பொய்களை அவிழ்த்து விட்டனர்.

ரூ.57 லட்சம் மோசடி

இதனை நம்பியவர்களிடம் உடனடி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.56 லட்சத்து 97 ஆயிரத்து 100-ஐ பெற்றுள்ளனர்.

பின்னர் போலியான மத்திய அரசின் உத்தரவை தயார் செய்து எபிரேம் என்பவருக்கு கான்பூர் ெரயில்வேயிலும், டெய்சி செல்லத்துரை, அருண்குமார் ஆகியோருக்கு ஐதராபாத் வருமானவரி துறையிலும் வேலை கிடைத்ததாக நாடகம் ஆடியுள்ளனர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏதோ ஒரு போலியான அலுவலகத்தில் பணி அமர்த்தியுள்ளனர். மேலும் 2 மாதம் சம்பளமும் கொடுத்துள்ளனர். மத்திய அரசின் பணி கிடைத்து விட்டது, இனிமேல் எங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என 3 பேரும் உற்சாக மிகுதியில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி 2 மாதம் கூட நீடிக்கவில்லை. இடிவிழுந்தது போல் அதிர்ச்சி தகவலை அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

அதாவது வேலையில் சேர்ந்த 2 மாதத்திற்கு பிறகு 3 பேரையும் பணியில் இருந்து நீக்குவதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் விசாரித்த போது, ஜெயன் பிரபு உள்ளிட்டோர் போலி அரசு ஆணை தயார் செய்து தங்களை போலியான அலுவலகத்தில் பணியமர்த்தி நாடகம் ஆடியதை கண்டுபிடித்தனர். மேலும் தங்களிடம் பணம் மோசடி செய்து ஏமாற்றியதையும் அறிந்தனர்.

ஒருவர் கைது

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு அளித்தனர்.

பின்னர் புதுக்கடை போலீசார் ஜெயன் பிரபு, சாய் பிரசாத், இன்பா, ரதிமீனா, ரத்தினபாய் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜெயன் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story