கிராம நிர்வாக அலுவலர்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து மோசடி; 2 வாலிபர்கள் கைது
ஆலங்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலர்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து பணம் மோசடியில் ஈடுபட்டதாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலர்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து பணம் மோசடியில் ஈடுபட்டதாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலி முத்திரைகள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவர் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து, அதிகாரிகளின் கையெழுத்துடன் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கணேசன் போலி முத்திரைகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதற்கு கணேசனின் கூட்டாளிகளான அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜா (22), கருப்பசாமி மகன் சுரேஷ் (32) ஆகியோர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்களின் போலி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜா, சுரேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கணேசன் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கூட்டுறவு சங்கங்களில் கடன்
மேலும், இவர்கள் போலி முத்திரைகளை பயன்படுத்தி பல்ேவறு கூட்டுறவு சங்கங்களில் பணத்தை கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.