சென்னை கோயம்பேட்டில் நிர்வாணமாக காட்டும் கண்ணாடி விற்பதாக லட்சக்கணக்கில் மோசடி
சென்னை கோயம்பேட்டில் விடுதியில் அறை எடுத்து தங்கி நிர்வாணமாக காட்டும் கண்ணாடி விற்பதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். போலி துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
போலி துப்பாக்கி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் அந்த விடுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒரு அறைக்குள் அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை செய்தனர். அந்த அறையில் 4 பேர் இருந்தனர். மேலும் அந்த அறையில் ஒரு கை துப்பாக்கி, 8 தோட்டாக்கள், கோவில் கோபுரத்தில் வைக்கப்படும் செம்பு கலசங்கள், கருப்பு நிற அரிசி, கை விலங்கு, போலீஸ்காரர்கள் போன்ற போலி அடையாள அட்டைகள், முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றை பரிசோதனை செய்ததில் அவை சினிமாவில் பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து அந்த அறையில் தங்கியிருந்த பெங்களூருவைச் சேர்ந்த சிவா என்ற சூர்யா (வயது 39), குபாய்ப் (37), ஜித்து (24), இர்சாத் (21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த அறையில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், 'சதுரங்கவேட்டை' சினிமா பட பாணியில் தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறி வைத்து நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
நிர்வாண தோற்றம்
இவர்கள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்குவார்கள். பின்னர் தொழில் அதிபர்கள், பணக்காரர்களை குறி வைத்து அவர்களை தொடர்பு கொண்டு, தங்களிடம் உள்ள விலை உயர்ந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம் பார்த்தால் பெண்கள் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணமாக தெரிவார்கள் என ஆசை வார்த்தை கூறுவார்கள். இதனால் சபலம் அடையும் அவர்கள், அந்த கண்ணாடியை வாங்க ஆவலுடன் இவர்கள் தங்கி உள்ள விடுதி அறைக்கு செல்வார்கள். அப்போது அவர்களை நம்ப வைக்க தங்களுடன் இருக்கும் 2 பேரை நிர்வாணமாக நடிக்க வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி, அந்த கண்ணாடி அணிந்தால் இதுபோல் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணமாக தெரிவார்கள் என மேலும் ஆசையை தூண்டுவார்கள். பின்னர் அந்த கண்ணாடியின் விலை ரூ.1 கோடி. ஆர்டர் செய்துதான் வாங்க வேண்டும் என்று கூறி அவர்களிடம் இருந்து முன்பணமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூலித்து நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீஸ் போல் நடித்து...
மேலும் சில நேரங்களில் இதுபோல் கண்ணாடி வாங்க வருபவர்களிடம் அந்த கண்ணாடியை பார்க்க கொடுத்துவிட்டு, எதிர்பாராதநேரத்தில் இவர்களே அந்த கண்ணாடியை உடைத்துவிட்டு, அதனை வாங்க வந்தவர்தான் உடைத்து விட்டதாக கூறி ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதும், அவர்கள் தரமறுக்கும்போது அவர்களது ஆட்களே போலீஸ் போல் உடையணிந்து, போலி துப்பாக்கி, கைவிலங்குடன் அறைக்குள் புகுந்து கைது செய்துவிடுவதாக மிரட்டி பணத்தை பறித்ததும் தெரிந்தது.
சென்னையில் இவர்கள் கோவில் கோபுர கலசத்தை திருட இருந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் இதுபோல் மோசடியில் ஈடுபட இருந்தார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.