அகழாய்வில் கண்டெடுத்த கலைநயமிக்க தங்க அணிகலன்கள்
அகழாய்வில் கலைநயமிக்க தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 12 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. பண்டைய காலத்தில் பயன்படுத்திய மண்குடங்கள், புகைக்கும் கருவி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட காதணிகள் உள்பட 2,100-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நேற்று புதிதாக 13-வது குழி தோண்டப்பட்டது. அதில் சங்குகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பொம்மைகள், 2 தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன. இத்தகைய பொருட்களை பார்க்கும் போது பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கலைநயத்தில் மிகுந்த நுட்பம் கொண்டவர்களாக விளங்கி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. புதிதாக தோண்டப்பட்ட குழியின் மேற்பரப்பில் இத்தகைய பொருட்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஆழமாக தோண்டும்போது, ஏராளமான பண்டைய கால பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.