காங்கயம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம்
காங்கயம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இழப்பீடு
தாராபுரம்-ராசிபாளையம் முதல் தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை விவசாய விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமபட்டினம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்கோபுரம் அமையும் இடத்திற்கு 200 சதவீதம் இழப்பீடும், கம்பி செல்லும் இடத்திற்கு 100 சதவீத இழப்பீடும், திட்டப் பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களுக்கு பொதுப்பணித்துறையின் கணக்கீட்டின்படி இழப்பீடும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது போராட்ட இடத்திற்கு வந்த காங்கயம் தாசில்தார் இது குறித்து தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு, ஒரு வாரத்தில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதன் பின்னர் 50 நாட்கள் கடந்த பின்னரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில், காங்கயம் தாசில்தாரிடம் முறையீடு செய்வதற்காக தாலுகா அலுவலகம் வந்தனர்.
அப்போது வெளியில் சென்று விட்டு வந்த காங்கயம் தாசில்தார் வாகனம், விவசாயிகளைப் பார்த்தும் திருப்பிக் கொண்டு மீண்டும் வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தாசில்தார் அலுவலக வாசல் முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறும்போது "உயர்மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை தாசில்தார் அலுவலக வாசலில் எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்" என்றார்.
இது குறித்து தாசில்தார் ஆர்.ஜெகதீஸ்குமார் கூறும்போது " விவசாயிகளைப் பார்த்ததும் நான் காரைத் திருப்பிக் கொண்டு செல்லவில்லை.
தாராபுரம் சென்று விட்டு அலுவலகத்திற்கு வந்தேன். காங்கயம்-பாப்பினி அருகே நீரேற்று உந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வதற்கு மடவிளாகம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு ஆய்வு செய்வதற்காக உடனே நான் கிளம்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது.
விவசாயிகளைத் தவிர்ப்பதற்காக நான் வெளியில் சென்றதாகக் கூறுவது தவறு" என்றார்.