விஜயபாஸ்கர் வழக்கு: சொத்துக்கள் முடக்கப்பட்டது ஏன்? - வருமான வரித்துறை விளக்கம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில் வருமான வரித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை,
கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ஆம் ஆண்டு முதல் 2018-19 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், "வருமான வரித்துறை முடக்கிவைத்துள்ள இந்த வங்கி கணக்குகளில்தான் எம்எல்ஏவுக்கான சம்பளம் மற்றும் அரசு நிதிகளையும் பெறுகிறேன். அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பியும் அதனை செலுத்தவில்லை.
மேலும், சொத்துக்களை விற்பதை தடுப்பதற்காக அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ள வங்கி கணக்குகளில் அரசு நிதி எதும் வரவில்லை என்றும் அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு விஜயபாஸ்கர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.