தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு; ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி


தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு; ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 9 April 2024 6:59 PM IST (Updated: 9 April 2024 7:04 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவை அடுத்து, சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டு உள்ள அவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம். வீரப்பனால் உருவாக்கப்பட்ட பலர் பெயர், புகழுடன் தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர் என கூறியுள்ளார். அவருடைய உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இரண்டு முறை சட்டசபைக்கும், மூன்று முறை சட்ட மேலவைக்கும் ஆர்.எம். வீரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார்.


Next Story