கரூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தோரணக்கல்பட்டி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான அரசாணை பெற்று டெண்டர் முதலிய பூர்வாங்க ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டிருந்தது. மேலும் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு அமர்வு புதிய புறநகர் பஸ்நிலையம் அமைப்பதற்கான வேலைகளை தொடரலாம் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க. அரசு தோரணக்கல்பட்டியில் உள்ள அதே புறம்போக்கு இடத்தில் இலங்கை அகதிகள் முகாம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்காக தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வேலையை செய்ய தொடங்கினர். அப்போது இளங்கோவன் என்பவர் அங்கு சென்று வேலை செய்யும் இடமானது தனது மனைவியின் பெயரில் உள்ளது. ஆகவே அந்த இடத்தை விட்டுவிட்டு அகதிகள் முகாம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பணிகள் செய்யுமாறு அவர்களிடம் கூறினார். அப்போது அந்த இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை காட்டி தனது நிலைப்பாட்டை விளக்க முயற்சித்த போது காவல்துறை அதிகாரிகள் அவரை மிரட்டி அந்த இடத்தை விட்டு அனுப்பிவிட்டனர்.

மேலும் அங்கு வந்த ஏகாம்பரம் மற்றும் சத்தியமூர்த்தி என்பவர்கள் அந்த இடத்திற்காக ஏற்கனவே நாங்கள் இது சம்பந்தமாக வழக்கு தொடுத்துள்ளோம். ஆகையால் வழக்கு முடியும் வரை பணிகளை தொடங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இது எதையும் பொருட்படுத்தாது அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை மிரட்டி விரட்டிவிட்டனர். இந்நிலையில் 15-ந்தேதி (நேற்று) காலையில் இளங்கோவன், ஏகாம்பரம், சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்று விட்டனர். மேலும் புதிய புறநகர் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரஇருப்பதால் வழக்கு முடிவடையும் வரை பணிகளை தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story