சத்தியமங்கலத்தில் மூலிகை நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் வேண்டுகோள்
சத்தியமங்கலத்தில் மூலிகை நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்து உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சத்தியமங்கலத்தில் மூலிகை நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடந்து உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கவர்ச்சி விளம்பரம்
சத்தியமங்கலத்தில் 2 மூலிகை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 6 பேர் செயல்பட்டனர்.
இந்த நிறுவனத்தின் சார்பில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்றும், அதன்பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி கொடுக்கப்படும் என்பது போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை நம்பி ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், தூத்துக்குடி, மதுரை, கடலூர், விருதுநகர், விழுப்புரம், திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை செலுத்தினார்கள். ஆனால் அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனத்தினர் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர்.
புகார் அளிக்கலாம்
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் முதலீட்டாளர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் உரிமையாளர்களை கைது செய்தனர். இந்த மோசடியில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.