தொடர் மழையால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பின: முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


தொடர் மழையால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பின:  முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. இதன் காரணமாக முதுமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

நீலகிரி

கூடலூர்

தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. இதன் காரணமாக முதுமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

தொடர் மழையால் பசுமை

முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தை புலிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வறட்சியான காலநிலை காணப்படும்.

இதனால் தாவரங்களை உண்டு வாழும் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பசுந்தீவனத்தை தேடி இடம்பெயர்ந்து சென்று விடுகிறது. நடப்பாண்டில் கடந்த மாதம் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புலி தவிர பிற வனவிலங்குகள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முதுமலை, கூடலூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

இதன் காரணமாக காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில சமயங்களில் புலிகள் நடந்து செல்வதையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தற்போது குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக வனத்துறையின் வாகனத்தில் சவாரி சென்று வனம் மற்றும் வன விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இதேபோல் வன ஊழியர்களும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, தொடர்மழையால் முதுமலை வனம் பசுமையாக காணப்படுகிறது. மேலும் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளையும் அதிகளவு காணமுடிகிறது. இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


Next Story