சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.90 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.90 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையிலான ஆர்.பி.எப். புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டெல்லியில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது நடைமேடையில் வந்து நின்றது. அந்த ரெயிலின் சரக்கு பெட்டியில் சில பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அந்த பார்சல்களை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இந்த பார்சல்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து மொத்தம் 26 பார்சல்களில் இருந்த சுமார் ரூ.90 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து சுங்க இலாக்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார், டெல்லியில் இருந்து இந்த பார்சல்களை அனுப்பியது யார்? என விசாரித்து வருகின்றனர்.