கடந்த ஆண்டை விட அதிகரிப்பு:குமரியில் உலா வரும் வெளிநாட்டு பறவைகள்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் குமரி மாவட்டத்துக்கு வந்து உலா வருகின்றன.
நாகர்கோவில்:
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் குமரி மாவட்டத்துக்கு வந்து உலா வருகின்றன.
வெளிநாட்டு பறவைகள்
இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது அவர்களுக்கு இணையாக வெளிநாட்டு பறவைகளும் குமரி மாவட்டத்துக்கு படையெடுக்கின்றன. குமரி மாவட்டத்தில் இரு பருவ காலத்திலும் மழை பெய்வதால் ஆண்டு முழுவதும் நீர் நிலைகளில் தண்ணீர் காணப்படுகிறது.
இதன் காரணமாக உணவு, பாதுகாப்பு, புகலிடம் தேடி குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு பறவை இனங்கள் ஆண்டு தோறும் வருகின்றன. அதிலும் முக்கியமாக அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது.
உள்நாட்டுப் பறவைகளான முக்குளிப்பான், நீர்காகம், பாம்பு தாரா, புள்ளி மூக்கு தாரா, கூழக்கடா, பெரிய வெண் மூக்கு, குருட்டு கொக்கு, சாம்பல் கொக்கு, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாய் மூக்கன், பூ நாரை, வெள்ளை மீன் கொத்தி மற்றும் பல பறவைகள் இங்கேயே கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பறவைகள் வெளிநாடுகளுக்கு செல்வது இல்லை.
குமரி வருகை
அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் குமரி மாவட்டத்தை தேடி வருகின்றன. அவற்றில் குறிப்பாக படை குருவி (ரோசி ஸ்டார்லிங்), ஆலா, செங்கால் நாரை, ஊசி வால் வாத்து, சிறு கொசு உள்ளான், கர்லியு மணலுள்ளான், நீந்தும் உள்ளான், கார்கனி, கோல்டன் பிளோவர், பார்கெட்டடு கூஸ் மற்றும் டெர்ன் உள்பட பல பறவை இனங்கள் வருகின்றன.வட துருவத்தில் பனிக்காலம் தொடங்கியதும் அங்கு கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது.
மேலும் ஆர்ட்டிக் பகுதியில் தண்ணீர் பனிக்கட்டியாக மாறுவதால் உணவு கிடைக்காமல் பறவைகள் திண்டாடும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதன் காரணமாக பறவைகள் மிதமான தட்ப வெப்பநிலை நிலவும் தெற்கு பகுதியான குமரி மாவட்டத்தை நம்பி வருகின்றன.
அதிகளவில் வரத்து
இந்த நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவிலான வெளிநாட்டு பறவைகள் குமரி மாவட்டத்துக்கு வந்திருப்பதாக பறவை ஆராய்ச்சியாளர் பாலசந்திரன் கூறினார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, "வெளிநாட்டு பறவைகள் தஞ்சம் புகும் இடமாக குமரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் காலம் தவறாமல் வெளிநாட்டு பறவைகள் வந்துவிடுகின்றன. அவ்வப்போது அாிய வகை பறவைகளும் வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வந்த பூநாரை பறவைகள் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கில் வந்துள்ளன. அதிலும் படை குருவிகள் எப்போதும் போல தற்போதும் அதிகளவில் வந்துள்ளன. அவை மணக்குடி காயல், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வருகின்றன. இதுபோக மூக்கு உள்ளான், கொசு உள்ளான், ஆலா உள்ளிட்ட பறவை இனங்களும் வந்துள்ளன" என்றார்.