போர்டு தொழிற்சாலை மீண்டும் இயக்கம்: இசைவாணையை புதுப்பித்து உத்தரவு


போர்டு தொழிற்சாலை மீண்டும் இயக்கம்: இசைவாணையை புதுப்பித்து உத்தரவு
x

கோப்புப்படம்

போர்டு தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணையை புதுப்பித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த போர்டு, சென்னையை அடுத்த மறைமலைநகரில் 1996-ம் ஆண்டு தனது தொழிற்சாலையை தொடங்கியது.

இந்த சூழலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு (2021-ம் ஆண்டு) இந்தியாவில் கார் உற்பத்தியை போர்டு நிறுவனம் நிறுத்திக்கொண்டது. மறைமலைநகரில் 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இன்னொரு தொழிற்சாலை போர்டு நிறுவனத்தின் வசமே இருந்தது. அந்த இடம் விற்பனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10-ந் தேதி சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் மீண்டும் போர்டு தொழிற்சாலையை தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை மறைமலை நகரில் உள்ள போர்டு ஆலை மீண்டும் திறக்கப்படுவதாக கடந்த 13-ம் தேதி அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து போர்டு தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான அனுமதி கோரி தமிழக அரசிடம் கடிதம் அளித்தது.

இந்நிலையில், போர்டு நிறுவனத்தின் கோரிக்கைப்படி மறைமலை நகர் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவு ஆணையை புதுப்பித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆலையின் இயக்க இசைவு ஆணை, கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில், 2028 மார்ச் 31-ம் தேதி வரை ஆணை புதுப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story