நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்குஇலவச பட்டா வழங்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மக்களை பெற்று கொண்டார்.
பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு செந்தில்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் மேரி குமார் தலைமையில் மனு வழங்கினர். அந்த மனுவில், ''பாளையங்கோட்டை 8-வது வார்டில் உள்ள சக்திநகர், சத்யாநகர், முப்புடாதி அம்மன் கோவில் கீழத்தெரு, சீவலப்பேரி ரோடு, செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் 30 வருடங்களாக நத்தம் நிலத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வரைமுறை பட்டா வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
இதைப்போல் கேசவநேரி பகுதி மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.
தண்ணீர் திறக்க....
தாமிரபரணி திருநெல்வேலி கால்வாய் நயினார்குளம் பாசன சங்கத்தினர் தலைவர் நெல்லையப்பன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் ஆகியோர் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், '' மாவட்டத்தில் விவசாயத்திற்கான பிரதான கால்வாய்களான திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன்கால்வாய் ஆகிய 3 கால்வாய்களில் சுமார் 17 ஆயிரத்து 500 ஹெக்டேர் நஞ்சை நிலம் உள்ளது. இந்த 3 கால்வாய்களிலும் 3 பருவங்களிலும் விவசாயம் செய்து வந்தோம். தற்போது ஒருபோகம் மட்டுமே நெல் விளைந்து வருகிறது. உளுந்து பருவம் இரண்டாவது ேபாகம் இல்லாமல் போய்விட்டது. இதனால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த முறை இந்த 3 கால்வாய்களிலும் கார் பருவம் செய்வதற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
சுடுகாட்டுக்கு தனிப்பட்டா
அம்பை தாலுகா செட்டிமேடு, மேலஏர்மாள்புரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், ''மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு மற்றும் மேலஏர்மாள்புரத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள சுடுகாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றோம். தற்போது இந்த இடம் புறம்போக்கு என்று கூறி தனிநபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். தற்போது அந்த இடத்தில் நன்மைக்கூடம் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், தாசில்தார் சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார். இதுதொடர்பாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் தனிநபர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கலெக்டர் கவனத்தில் எடுத்து சுடுகாட்டிற்கு உரிய அந்த இடத்தை அரசு பதிவேட்டில் ஏற்றி தனி பட்டா வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
மாடவீதியை காணவில்லை
பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, துணைத்தலைவர் கார்த்திக் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ''்நெல்லையப்பர் கோவிலில் தெற்கு மாட வீதியும், மேலமாட வீதியும் தான் உள்ளது. வடக்கு மாடவீதியை காணவில்லை. எனவே வடக்கு மாடவீதியை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
அம்பை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தன்னைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதபோல் பல்வேறு அமைப்பினர் வந்து மனு கொடுத்தனர்.