போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்
x

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்.

ராணிப்பேட்டை

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்விற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 6,858 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் தாளாக 70 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி நடந்தது.

இதையொட்டி தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர். ஆண், பெண் தேர்வர்கள் தனித்தனி வரிசையில் நிறுத்தப்பட்டு பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன், கால்குலேட்டர், எலக்ரானிக் கைக்கெடிகாரம், புளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களின் செல்போன்களை போலீசார் வாங்கி டோக்கன் வழங்கினர். 10 மணிக்கு பின்னர் தேர்வு மையங்களுக்கு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

5,669 பேர் எழுதினர்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வை 5,669 பேர் எழுதினார்கள். 1,189 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வு மையத்தை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வர்கள் கண்காணிக்கப்பட்டனர். 2-ம் தாளாக மாலை 3.30 முதல் 5.15 மணி வரை பொதுஅறிவு, உளவியல் தொடர்பான 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.

தேர்வு எழுத வருபவர்களுக்காக வேலூர் புதிய, பழைய பஸ்நிலையத்தில் இருந்து வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வையொட்டி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 900 போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையில் பணியாற்றும் 1,081 போலீசாருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story