ஆசை நாயகிக்காக... ஒரு கொலை...


ஆசை நாயகிக்காக... ஒரு கொலை...
x

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு - இது வான்புகழ் வள்ளுவன் தந்த திருக்குறள் வரி.

ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் 135-வது குறளாக வரும் இதன் பொருள், ' பொறாமை உடையவனுக்கும், நல்லொழுக்கம் இல்லாதவனுக்கும் அமையும் வாழ்வு... உயர்வான வாழ்வாக கருதப்படமாட்டாது'

இன்று நாம் வாசிக்கப்போகும் சம்பவமும்... இந்த குறளோடு ஓரளவு ஒத்துப்போகக்கூடியது. அதுபற்றி பார்ப்போமா...

புதரில் கிடந்த பிணம்

24.3.2013...

அன்று காலைப்பொழுது... கிழக்குச்சூரியன், வான மங்கையின் நெற்றியில் செந்நிறத் திகலமாக இருந்தான்.

கோவையின் புறநகர் பகுதியையொட்டி உள்ள ஈச்சனாரி-மதுக்கரை சாலைப்பகுதியும் மெதுவாக விழித்து எழத்தொடங்கிய நேரம்...

பொதுவாக அந்த நேரத்தில்... அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. உள்ளூர் வாசிகள் ஒரு சிலர் காலைக்கடனுக்காக அந்த பகுதிக்கு வருவதுண்டு.

அப்படித்தான் அந்த பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி ஒருவர் அங்கு வந்தபோது... சாலையோர முட்புதரில் ஏதோ ஒன்று வித்தியாசமாக கிடப்பதை கவனித்தார்.

அருகில் சென்று பார்த்த அவர், அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

ஆம்....! அந்த முள்புதருக்குள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

பிணமாக கிடந்தவரின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது.

விரைந்து வந்த போலீசார்

சில நிமிடம் செய்வதறியாது நின்ற அந்த காவலாளி, தான் கண்ட காட்சி பற்றி உடனடியாக போத்தனூர் போலீசுக்கு தெரிவித்தார்.

விஷயத்தை கேள்விப்பட்டதும் சம்பவ இடத்துக்கு அன்றயை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ராமச்சந்திரன், போத்தனூர் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

போலீசாரின் கழுகு கண்கள்... அந்த இடத்தை சுற்றிலும் ஸ்கேன் செய்வதுபோன்று பார்வையிட்டது.

கொலையுண்ட வாலிபர் அணிந்து இருந்த ஆடையில் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லை.

எனவே அவர் யார் என்பதை ஊகிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

எதற்காக இ்ந்த கொலை?... வழிப்பறிக்காக இருக்குமோ... முன்விரோதமா? என்று பல கோணங்களில் போலீசாரின் சிந்தனை இருந்தது.

கிடைத்தது துருப்புச்சீட்டு

இது ஒருபுறம் இருந்தாலும், வழக்கமான நடைமுறையான பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

எந்த தடயங்களும் கிடைக்கவில்லையே... இந்த வழக்கு சிரமத்தை ஏற்படுத்திவிடுமோ என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்... போலீசாரின் கழுகுப்பார்வையில் பட்டது அந்த மோட்டார் சைக்கிள்.

பிணம் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த மோட்டார் சைக்கிள்தான் போலீசுக்கு துருப்புச்சீட்டாக அமைந்தது.

அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அடையாளம் தெரிந்தது

போலீசாரின் விசாரணைக்கு பலன் கிடைத்தது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு உரியவர் கோவை சாய்பாபா காலனி, குப்பேகோணாம்புதூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது30) என்பது தெரியவந்தது.

இருப்பினும் கொலையானவர் அவர்தானா என்பதை உறுதிப்படுத்த, அந்த முகவரிக்கு போலீசார் சென்றனர்.

அந்த முகவரியில் இருந்த வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அங்கு ஒரு பெண் தனது 3 வயது மகனுடன் ஒருவித பரிதவிப்புடன் இருந்தார்.வெளியே சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என்ற கலக்கத்தில் இருந்த அந்த பெண்ணிடம் போலீசார் மெல்ல விவரத்தை கூறினர்.

அதை கேட்டதும் அந்த பெண் பெருங்குரலெடுத்து அழுது புலம்பினார்.

வீட்டில் இருந்த புகைப்படத்தை வைத்து, அது சதீஷ்குமார் வீடுதான் என்பதையும், அங்கு இருந்தது அவருடைய மனைவி மற்றும் குழந்தை என்பதை போலீசார் புரிந்து கொண்டனர்.பின்னர் அந்த பெண்ணை போலீசார் சமாதானப்படுத்தி... கோவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த உடலைப்பார்த்து, அது தனது கணவர் சதீஷ்குமார்தான் என்று அடையாளம் காட்டினார்.

ஒப்பந்த தொழில்

தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

சதீஷ்குமார் நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதிக்கு ஏன் சென்றார்? என்று அந்த பெண்ணிடம் போலீசார் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணோ, 'என் கணவருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. அவர் ரொம்ப நல்லவர்' என்றே கூறிக்கொண்டு இருந்தார்.

அதற்கு மேல் அவருக்கு எந்த விவரமும் தெரியவில்லை. அதை போலீசார் புரிந்து கொண்டனர்.

இருப்பினும்... அந்த கொலை போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.

சதீஷ்குமார்... ஹாலோபிளாக் கற்களை, கட்டிட வேலை நடைபெறும் இடத்துக்கே சென்று தயாரித்து கொடுக்கும் ஒப்பந்த தொழில் செய்து வந்ததும், தொழில் போட்டி இந்த கொலைக்கு காரணம் இல்லை என்பதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆசை நாயகி

இதற்கிடையே சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கினர்.

அவரது செல்போன் எண்ணை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த 30 வயது பெண்ணுடன், சதீஷ்குமார் அடிக்கடி பேசி இருப்பதும், அந்த பெண்ணின் வீட்டுக்கு அவர் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தங்களது விசாரணையை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தினர்.

அப்போது செல்வபுரத்தில் இருந்த அந்த பெண்ணை, சதீஷ்குமார் ஆசைநாயகியாக வைத்து இருந்தது தெரியவந்தது.

எனவே அந்த பெண், இந்த கொலைக்கு காரணமாக இருப்பாரோ? என்ற கோணத்தில்... அந்த பெண்ணிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்தனர்.

ஆனால் ஆசை நாயகிக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

வேறு நபருடனும் தொடர்பு

இருந்தாலும்... அந்த பெண் விவகாரத்தில்தான், இந்த கொலை நடைபெற்று இருப்பதை உறுதி செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெண் போலீசாரிடம் சில தகவல்களை கூறினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அந்த பெண்ணின் கணவர், குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு, அதே ஊரைச் சேர்ந்த மதிவாணன் (30) என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணை... தனது ஆசை நாயகியாக்கிக்கொண்டார் மதிவாணன்.

பின்னர் தனது ஆசை நாயகியை கோவைக்கு அழைத்து வந்து, தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். மேலும் செல்வபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெண்ணை குடிவைத்தார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

சிக்கிய கொலையாளி

இந்தநிலையில்தான் சதீஷ்குமாருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தனது ஆசை நாயகியுடன் சதீஷ்குமார் நெருக்கமாக இருப்பதை பார்த்து மதிவாணன் ஆத்திரம் அடைந்தார். இருந்தாலும் அந்த ஆத்திரத்தை வெளிக்காட்டவில்லை.

ஒருகட்டத்தில் மதிவாணனுடன் பழகுவதை நிறுத்திய அந்த பெண், சதீஷ்குமாருடன் மட்டுமே உல்லாசமாக இருந்து வந்தார்.

இதற்கிடையே மதிவாணன் கூடலூருக்கு சென்றுவிட்டார்.

இந்த விவரத்தை எல்லாம் அறிந்த போலீசார்.... சதீஷ்குமார் கொலைக்கு மதிவாணன் காரணமாக இருக்கலாம் என்று கருதினர்.

இதையடுத்து போலீசார் அவரை தேடியபோது, தலைமறைவாகிவிட்டார்.

எனவே ஆசைநாயகியை வைத்தே மதிவாணனை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி... மதிவாணனிடம் செல்போனில் பேசி வரவழைக்குமாறு அந்த பெண்ணிடம் கூறினர்.

போலீசாரின் சொல்படி... அந்த பெண்ணும் மதிவாணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தனது வீட்டுக்கு அழைத்தார்.

அதை நம்பிய மதிவாணன், ஆசை நாயகியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் கோவை செல்வபுரத்துக்கு வந்தார்.

ஆசை நாயகி வீட்டுக்கு வந்த மதிவாணன் போலீஸ் விரித்த வலையில் சிக்கினார்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் சதீஷை கொன்றது நான்தான் என்று ஒத்துக்கொண்டார்.

கொலை நடந்து 3 நாட்களுக்கு பின்னர் அவர் பிடிபட்டார்.

அதாவது 27.3.2013 அன்று போலீசார் மதிவாணனை கைது செய்தனர்.

போலீசில் மதிவாணன் அளித்தவாக்குமூலத்தில் கூறியதாவது:-

உறவை துண்டித்த ஆசை நாயகி

கணவனிடம் கருத்து வேறுபாட்டில் இருந்த கூடலூரை சேர்ந்த அந்த பெண்ணை எனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து வேலையும் வாங்கி கொடுத்தேன்.

அந்த பெண் எனக்கு மட்டும் உரியவர் என்று நினைத்து இருந்த நேரத்தில்...திடீரென்று அவருக்கு சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.

என்னைவிட வசதியாக இருந்த சதீஷ்குமார் கிடைத்ததால்... அந்த பெண் எனது உறவை துண்டித்தார்.

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சதீஷ்குமார் உயிருடன் இருப்பதால்தானே என்னுடன் அந்த பெண் வர மறுக்கிறார் என்று கருதி, சதீஷ்குமாரை தீர்த்து கட்ட திட்டமிட்டேன்.

இதற்காக கூடலூரில் இருந்து மிளகாய்ப்பொடி, கத்தி ஆகியவற்றை தயார் செய்து கோவை வந்தேன். கோவை வந்ததும் அவரை கொலை செய்ய காத்திருந்தேன்.

தீர்த்துக்கட்டினேன்

கோவை வந்த நான்...சம்பவத்தன்று இரவு 12 மணியளவில் சதீஷ்குமாரை சந்தித்து பேசினேன். அவர் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்பதால், நான் அவசரமாக மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு செல்ல வேண்டும். என்னை மோட்டார் சைக்கிளில் கொண்டுவிடு என்று கூறினேன்.

எனது திட்டம் அறியாத சதீஷ்குமாரும்... என்னை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

ஈச்சனாரி-மதுக்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றபோது, சிறுநீர் கழிக்கவேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறும் கூறினேன்.

சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அவர் சற்றும் எதிர்பாராத நிலையில்...நான் தயாராக வைத்து இருந்த மிளகாய்ப்பொடியை அவர் முகத்தில் திடீரென்று வீசினேன்.

இதனால் ஏற்பட்ட எரிச்சலில் கண்ணை கசக்கிக்கொண்டு இருந்த சதீஷ்குமாரை... என்னிடம் இருந்த கத்தியால், சரமாரியாக குத்தினேன்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, புதருக்குள் வீசிவிட்டு... எதுவும் தெரியாததுபோல் அங்கிருந்து நழுவினேன். பின்னர் பஸ் மூலம் கூடலூர் வந்துவிட்டேன்.

ஆனாலும்.... போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி, என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை கோவை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கொலைக்கு பயன்படுத்திய கத்தி, மிளகாய்ப்பொடி மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் போலீசார் ஆவணங்களாக தாக்கல் செய்தனர். மதிவாணனின் வாக்குமூலமும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

30.10.2017

அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அன்றைய தினம்.... பலத்த பாதுகாப்புடன் மதிவாணன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கே.விஜயா, தனது இருக்கைக்கு வந்ததும்... தீர்ப்பை வாசித்தார்.அவர் தனது தீர்ப்பில், கொலை குற்றத்துக்காக மதிவாணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இதைத்தொடர்ந்து மதிவாணன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசை நாயகியை சொந்தம் கொண்டாட நடந்த போட்டியில்... கொலையை செய்து விட்டு தற்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து வருகிறார் மதிவாணன்.


துப்புதுலங்கியது எப்படி? விசாரணை அதிகாரி பேட்டி



இந்த கொலை வழக்கில் துரிதமாக துப்புதுலக்கி... மதிவாணனை கைது செய்த, இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கூறியதாவது:- கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர் யார் ? என்று முதலில் எந்த அடையாளமும் தெரியவில்லை. அடையாளம் தெரியாதவர் என்றே முதலில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கில், சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மூலம்தான் துப்பு துலங்கியது.

அதன் பின்னரே வழக்கில் மற்ற முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழத்தொடங்கியது. வலுவான ஆதாரங்கள் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம்.

அதே நேரம்... மதிவாணனின் ஆசைநாயகிக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பதால் அவரிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டார். குற்றவாளியை கைது செய்வதிலும் அந்த பெண் உதவினார்.

கோர்ட்டில் சரியான முறையில் தடயங்கள் மற்றும் சாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story