தமிழகத்தில் முதல் முறையாக தாம்பரம்-மதுரவாயல் சாலையை சேதப்படுத்தாமல் கால்வாய் அமைக்கும் பணி
தமிழகத்தில் முதல் முறையாக தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையை சேதப்படுத்தாமல் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏரி உபரிநீர்
பருவ மழை தொடங்கும் போதெல்லாம் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் உபரிநீரால் அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம். அதன்பிறகு மழைநீர் வடிய காலதாமதம் ஏற்படுவதால் அந்த பகுதிகளில் உள்ள ஏராளமான குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பகுதியில் ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் ரூ.100 கோடி செலவில் 'கட் அண்ட் கவர் கால்வாய்' அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
54 மீட்டருக்கு கால்வாய்
இந்தநிலையில் பரணிபுத்தூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையை கடந்து மழைநீர் செல்ல வழி இல்லாததால் அந்த நெடுஞ்சாலையை தோண்டி சேதப்படுத்தாமல் "புஷ் துரோ" முறையில் தாம்பரம்-மதுரவாயல் சாலையின் கீழ் 54 மீட்டருக்கு கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கால்வாய் 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது போல் அமைக்கப்பட்டு உள்ளது. பின்னர் அதன்மீது கனமான இரும்பு தகடை பொருத்தி 'கம்பிரசர்' மூலமாக அழுத்தம் கொடுத்து "புஷ் துரோ" முறையில் ஒன்றன்பின் ஒன்றாக சாலையின் கீழ் தள்ளி கால்வாய் அமைத்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 மீட்டர் மட்டுமே செலுத்த முடியும். இதுவரை 32 மீட்டர் தூரம் உள்ளே சென்றுள்ளது. தற்போது 4-வது கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் இந்த பகுதியில் முழுமையாக மழைநீர் தேங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக...
இந்த பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ெரயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான இந்த பணிகள், தற்போது தமிழகத்தில் முதல் முறையாக தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையை சேதப்படுத்தாமல் நடந்து வருகிறது. இதனால் சாலைக்கும், போக்குவரத்துக்கும் எந்த பாதிப்பும் வராமல் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.