ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குகட்டணமில்லா சிகிச்சை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குகட்டணமில்லா சிகிச்சை  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
x
தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM IST (Updated: 25 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

அரசு ஊழியர்கள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் முதல்-அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.300 அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 1.9.2021 முதல் எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் 3-ம் நபர் ஒப்பந்தம் செய்து, இத்திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு வழங்கியுள்ளது.

இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் சிகிச்சை செலவுத் தொகையை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நிறுவன அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதில்லை. எனவே அரசாணைக்கு முரண்பாடாக உள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

கட்டணமில்லா சிகிச்சை

இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் வழங்குவதில்லை. மாறாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்ததொகையில் 25 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வழங்குவது என்ற நடைமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போக மீதி பணத்தை நோயாளிகளை கட்டசொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் ஈடுபடுகின்றன. இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக அரசின் உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.


Next Story