முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு


முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

மஞ்சளாறு அணை

தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இந்த அணை மூலம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 3,148 ஏக்கர் நிலங்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் கணவாய்பட்டி, பரசுராமபுரம், கட்டகாமன்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 2,111 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சுகுமார், உதவி செயற்பொறியாளர் சவுந்தர், உதவி பொறியாளர்கள் தளபதிராம்குமார், மோகன்தாஸ், கமலகண்ணன், பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து அடுத்த ஆண்டு (2024) மாா்ச் மாதம் 15-ந்தேதி வரை 153 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 3,386 ஏக்கர் நிலங்களுக்கு நேற்று முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை வினாடிக்கு 60 கனஅடியும், டிசம்பர் 16-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை 50 கனஅடியும், பிப்ரவரி 1-ந் தேதி முதல் மார்ச் 15-ந் தேதி வரை 45 கனஅடி தண்ணீரும் மஞ்சளாற்றின் வழியாக திறந்து விடப்படுகிறது.

புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 1,873 ஏக்கர் நிலங்களுக்கு அக்டோபர் 15-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வினாடிக்கு 40 கனஅடியும், டிசம்பர் 1-ந்தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 30 கனஅடியும், மார்ச் 1-ந் தேதி முதல் மார்ச் 15-ந் தேதி வரை 20 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

இதனால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 47 கன அடியாக இருந்தது.


Next Story