பல ஆண்டுகளாக குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்


பல ஆண்டுகளாக குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
x

கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் பல ஆண்டுகளாக பேரூராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல காணப்பட்டது. தற்போது குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு வாரச்சந்தையை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

மலை போல குப்பை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு பட்டுக்கோட்டை சாலையில் பழமையான பெரிய சந்தை நடந்த இடம் சந்தைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. விசாலமான பரப்பளவு கொண்ட சந்தை திடலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி மலை போல குவித்து வைத்திருந்தனர்.

இதனால் சுற்றுச்சூழல், சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் குப்பைகளை அகற்ற கோரிக்கை வைத்ததுடன் போராட்டங்களும் நடத்தினர்.

அகற்றப்பட்ட குப்பைகள்

இதனால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பேரூராட்சி குப்பைகள் கொட்ட இடமின்றி ஆங்காங்கே உள்ள பழைய கிணறுகளில் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து நவீன எந்திரங்கள் மூலம் சுமார் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்பந்த நிறுவனமே லாரிகள் மூலம் ஏற்றி சென்றது. எஞ்சியிருந்த பலநூறு டன் குப்பைகளை விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்கு அள்ளிச் சென்றனர். இதனால் தற்போது சந்தை திடல் சுத்தமாக காட்சி அளிக்கிறது.

மீண்டும் வாரச்சந்தை

வாரச்சந்தை திடலில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நூறு கடைகளுக்கு மேல் வர்த்தகம் செய்த பழமையான பாரம்பரியமான திங்கட்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தையை மீண்டும் தொடங்க வேண்டும். விசாலமான பரப்பளவில் உள்ள சந்தை திடலில் மேலும் ஆக்கிரமிப்புகள் நுழைந்து விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story