அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது: பொதுமக்கள் கருத்து


அனைத்துப் பணிகளுக்கும்  பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது:  பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

சட்டத்திருத்தம்

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும்.

அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.

அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும். அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

முறைகேடுகளை தடுக்கும்

பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு கருத்துகள் தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

விஜயகாந்த் (உணவு வினியோக ஊழியர், கம்பம்) :- அரசு வேலை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச்சான்று கட்டாயம் என்று புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பது ஒரு வகையில் நல்லது தான். அதே நேரத்தில் நாடு முழுவதும் இது நடைமுறைக்கு சாத்தியமா என்றும் பார்க்க வேண்டும். வடமாநிலங்களில் வேலை பெறுவதற்காக பல முறைகேடுகள் நடப்பதை கேள்விப்பட்டுள்ளோம். அதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் இந்த மசோதா அமைந்தால் அதை தாராளமாக வரவேற்கலாம்.

கோபி (கார் டிரைவர், தேனி) :- ஏற்கனவே அனைத்து சேவைகள், சான்றுகள் பெற ஆதார் கட்டாயம் என்ற நிலை உள்ளது. இப்போது பிறப்புச் சான்று கட்டாயம் என்று கொண்டு வந்தால் பலவிதமான பாதிப்புகளை கொடுக்கும். 1989-ம் ஆண்டுக்கு பிறகு தான் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் பழக்கம் அதிகரித்தது. தற்போது 35 வயதுக்கு மேல் உள்ள பெரும்பாலான மக்களிடம் பிறப்புச் சான்று கிடையாது. பள்ளி மாற்றுச்சான்றிதழ் தான் வயது சான்றாக பார்க்கப்படுகிறது. ஓட்டுனர் உரிமம் பெறவும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று கொண்டு வந்தால் 35 வயதை கடந்தவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே 1990-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று கொண்டு வந்தால் வரவேற்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் முறையாக பதிவு செய்யப்படுவதன் மூலம் போலிகள் தவிர்க்கப்படும்.

குளறுபடிகள் ஏற்படக்கூடாது

செல்வம் (அரசு ஊழியர், தேனி) :- அரசு வேலைக்கு பிறப்புச் சான்று அவசியம் என்பதை ஏற்கலாம். ஆனால், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றுக்கும் பிறப்புச் சான்றிதழ் தேவை என்பது தேவையற்ற குழப்பத்தை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அனைத்து சேவைகளுக்கும் ஆதார் பயன்பாடு அமலில் உள்ளது. ஆதார் கார்டு பெற்றபோது ஏற்பட்ட பிழைகளை சரி செய்யவே பலரும் படாதபாடு பட்டார்கள். இதுபோன்ற குளறுபடிகள் எதுவும் ஏற்படாத வகையில் இந்த புதிய மசோதாவில் ஷரத்துக்கள் இடம் பெற வேண்டும்.

கார்த்திக் (கணினி மைய உரிமையாளர், ஆண்டிப்பட்டி) :- பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற மசோதா நடைமுறைக்கு வந்தால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படலாம். அரசு வேலை உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று கொண்டு வந்தால் அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அவற்றை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்துவிட்டு, அதன்பிறகு இதை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story