சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு சமைக்க தேவையான கியாஸ் சிலிண்டர் செலவை அரசே முழுமையாக வழங்க வேண்டும். தேர்த்ல கால வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் செபத்தியாள் என்ற ஜெயா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மகபூப் பாஷா, ஜெலட்டின் மேரி, சம்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பிச்சுமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல், வணிகவரித்துறை கற்பகம், மற்றும் சரஸ்வதி, மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், லட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் ஜெசிந்தா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோவில்பிச்சை கோரிக்கை விளக்க உரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராசையா, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார். முன்னதாக பேரணி நடந்தது.


Next Story