காஞ்சீபுரத்தில் 41 ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை


காஞ்சீபுரத்தில் 41 ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 41 ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

காஞ்சிபுரம்

41 ஓட்டல்களில் சோதனை

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சீபுரம் மாநகராட்சிப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் 3 குழுவாகக்கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 29-ந்தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்கள் அதிகம் உள்ள காந்திரோடு மற்றும் நடுத்தெருவில் உள்ள 41 ஓட்டல்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 31 கிலோ அழுகிய பழங்கள், 2 கிலோ கெட்டுப்போன இறைச்சி, 10 பெட்டிகள் கொண்ட செயற்கை நிறமிகள் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.

23 ஓட்டல்கள் மீது வழக்கு

இந்த சோதனையில் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத 17 ஓட்டல்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது. கடந்த 6 மாதங்களில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 190 சட்டரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 23 ஓட்டல்கள் மீது பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்த வகையில் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தொடரப்பட்ட 40 சிவில் வழக்குகளின் விசாரணை முடிந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் ரூ.5,04,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 46 ஓட்டல்களில் தலா ரூ.2000 என ரூ.92,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உரிமம் இல்லாத ஓட்டல்கள்

மேலும் இந்த சோதனையில் 31 ஓட்டல் நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமம் இல்லாத 31 நிறுவனங்களுக்கு பிரிவு 63-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிமம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுத்தம், சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட 12 ஓட்டல்களுக்கு பிரிவு 32-ன் கீழ் மேம்பாட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்-அப் எண்ணில் புகார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் ஓட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் பற்றி புகார் தொரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவா் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story