பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை பணிகள் மும்முரம்


பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை பணிகள் மும்முரம்
x

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து அடிப்படை பணிகளை கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை


கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து அடிப்படை பணிகளை கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்காக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் பிற துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, கூடுதல் கலெக்டர் பள்ளிக்கட்டிடத்தின் உறுதித்தன்மை, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உள்ளாட்சி அமைப்பு மூலமாக பள்ளி வளாகத்தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் தொட்டி தூய்மை, கிருமிநாசினி தெளித்தல், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுதல், மழைநீர் தேங்காமல் தவிர்க்க வடிகால் வசதி, மக்கும், மக்காத குப்பை விழிப்புணர்வு ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

போலீஸ் சூப்பிரண்டு பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்தல், விழிப்புணர்வு வழங்குதல், பாதுகாப்பான இணையம் ஏற்படுத்துதல், ஆன்லைன் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகிய பணிகளை கண்காணிக்க வேண்டும்.

சான்றிதழ்கள் உடனடியாக

டி.ஆர்.ஓ. மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்தல், அரசுப்பள்ளி நம் அடையாளம் என்ற பேரணிக்கு தேவையான உதவிகளை செய்தல், பேரணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பள்ளி சேர்க்கை தொடர்பாக வலியுறுத்துதல், மாணவர்களுக்கு வழங்கக்கூடிய வருமான சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் இதர சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தும் பணிகள், பேரிடர் விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), மாவட்ட திட்ட அலுவலர் (ஐ.சி.டி.எஸ்.), மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆகியோர் தங்களது துறைசார்ந்த பணிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏதேனும் குறை இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story