மாமல்லபுரத்தில் நாளை முதல் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை - கலெக்டர் அறிவிப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதை அடுத்து ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இது இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தம் 343 அணிகள் கலந்து கொள்கின்றன
உலக அளவில் பல முன்னனி வீரர்கள் பங்கேற்க உள்ளதால், போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு சுமார் 100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான மொத்த செலவையும் தமிழக அரசே ஏற்கிறது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதிகளில் நாளை (12-ந் தேதி) முதல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.