மூதாட்டியிடம் 4½ பவுன் நகை பறிப்பு
பூதப்பாண்டி அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடுகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடுகிறார்கள்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 49). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார்.
இவருடைய தாயார் காந்திமதி (84) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சங்கர் கோவிலுக்கு புறப்பட்டு சென்று விட்டார். வீட்டில் காந்திமதி மட்டும் தனியாக இருந்தார். மதியம் 2 மணிக்கு சங்கர் வீடு திரும்பினார். அப்போது காந்திமதி அணிந்து இருந்த தங்க சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் காந்திமதி தூங்கி கொண்டிருந்த போது யாரோ உள்ளே புகுந்து 4½ பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது.
போலீஸ் தேடுகிறது
இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
வீட்டில் மூதாட்டி தவிர வேறு யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு, மர்ம ஆசாமி உள்ளே புகுந்து நகையை பறித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.