கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து கேரளாவில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து கேரளாவில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
நிபா வைரஸ்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரசுக்கு இதுவரை 2 பேர் பலியானார்கள். இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளா எல்லையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளதால் எல்லை பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாளையாறு சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக கோவை-கேரள எல்லையில் வாளையாறு, வேலந்தாவளம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகள்
கார், பஸ் உள்பட எந்த வாகனத்தில் கோவைக்கு வந்தாலும், அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தாலோ அல்லது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ அவர்களை திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர்களின் பெயர், செல்போன் விவரங்களும் பெறப்பட்டு, கேரள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மாவட்டத்தில் போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.