கடும் வெயிலால் கருகும் பூச்செடிகள்


கடும் வெயிலால் கருகும் பூச்செடிகள்
x

வடகாடு பகுதியில் நீர் நிலைகள் வறண்டு கிடக்கிறது. கடும் வெயிலால் பூச்செடிகள் கருகி வருகிறது. டேங்கர் லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

புதுக்கோட்டை

மலர் சாகுபடி

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெப்பம் மற்றும் வெப்ப காற்றுடன் கூடிய வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

மேலும் இப்பகுதிகளில் தென்னை, நெல், வாழை, பலா, சோளம், கரும்பு, எள், உளுந்து, பாகை, புடலை, மிளகாய், கடலை மற்றும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காக்கரட்டான், சென்டி, ரோஜா, பிச்சி, அரளி உள்ளிட்ட மலர் சாகுபடி பணிகளிலும் எண்ணற்ற விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

டேங்கர் லாரி மூலம் தண்ணீர்

இவ்வாறு விவசாயிகள் மூலமாக, பயிரிடப்பட்டு பராமரித்து வரப்படும் பயிர்களுக்கு மானாவாரி மற்றும் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாகவே தண்ணீர் பாய்ச்சப்பட்டு வரப்படுகின்றன. இப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கடும் வெயிலின் தாக்கத்தால் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காக்கரட்டான் போன்ற பூச்செடிகள் வெப்பம் தாங்காமல் கருகி வருவதால் விவசாயிகள் டேங்கர் லாரி மூலம் தண்ணீரை வாங்கி தற்காலிகமாக தற்காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தைல மரங்களை அழிக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் மூலமாக, தைல மரங்கள் பயிரிடப்பட்டு பராமரித்து வரப்படுகின்றன. தைல மரங்களை பயிரிட நீதிமன்றம் தடை விதித்து இருந்தும் கூட தைல மரங்கள் மழைக்காலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மேலும் வெட்ட வெட்ட வளரும் தன்மை கொண்ட தைல மரங்களை வேரோடு வெட்டி அழித்தால் தான் இவை அழியும்.

மேலும் தைல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை கூட விட்டு வைக்காமல் உறிஞ்சி விடுவதால் எத்தகைய வெயிலையும் தாங்கி செழித்து வளர்ந்து வருகின்றது. தைல மரங்கள் இருக்கும் இடங்களில் எந்த ஒரு விவசாய பயிர்களும் முறையாக வளர்வது இல்லை எனவும், இந்த தைல மரங்கள் இருக்கும் காடுகளில் எந்த ஒரு உயிரினமும் வசிக்க முடியாது.

இத்தகைய தைல மரங்களை முற்றிலும் அழித்தால் மட்டுமே மாவட்டத்தில் ஓரளவுக்கு வெப்பம் தணிய வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.


Next Story