இன்று ஆடிப்பெருக்கு:சேலத்தில் பூக்கள் விலை உயர்வுகுண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனை
சேலம்
இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்தன. குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்டது.
இன்று ஆடிப்பெருக்கு
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந்தேதி (ஆடிப்பெருக்கு) சேலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். இந்தாண்டு ஆடிப்பெருக்கான இன்று (வியாழக்கிழமை) அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி கோட்டை மாரியம்மன், எல்லைப்பிடாரி மாரியம்மன், பெரமனூர் மாரியம்மன் மற்றும் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கோவிலுக்கு சென்று சாமிக்கு பூ மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள்.
பூக்கள் விலை உயர்வு
இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆகின. அதன்படி ரூ.400-க்கு விற்பனை ஆன குண்டு மல்லி ஒரு கிலோ நேற்று ரூ.700-க்கு விற்பனை ஆகின. அதே போன்று ரூ.300-க்கு விற்பனையான சன்னமல்லி கிலோ ரூ.500-க்கும், கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆன சம்பங்கி ரூ.240-க்கும் விற்கப்பட்டது.
அதே போன்று ரூ.160-க்கு விற்பனை ஆன சாமந்தி ரூ.240 முதல் ரூ.280 வரையும், ரூ.100-க்கு விற்பனை ஆன அரளி ரூ.200-க்கும், ரூ.140-க்கு விற்பனை ஆன மஞ்சள் ரோஜா ரூ.200-க்கும் விலை உயர்ந்து விற்பனை ஆகின.
இது குறித்து பூ வியாபாரிகளிடம் கேட்ட போது, பூக்கள் வரத்து வழக்கமாக இருந்தன. ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனை ஆனது' என்றார்கள்.