கீரமங்கலம் கமிஷன் கடைகளில் பூக்கள் விலை சரிவு


கீரமங்கலம் கமிஷன் கடைகளில் பூக்கள் விலை சரிவு
x

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்ததால் கீரமங்கலம் கமிஷன் கடைகளில் பூக்களின் விலை சரிந்தது. டன் கணக்கில் பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தது.

புதுக்கோட்டை

பூக்கள் உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, பெரியாளூர், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் திருவரங்குளம் வரை சுமார் 100 கிராமங்களில் பிரதான விவசாயம் பூக்கள் உற்பத்தி. இந்த பகுதியில் மல்லிகை, கனகாம்பரம், முல்லை, காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, செண்டி, மாசிப்பச்சை உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கஜா புயலில் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலத்தில் உள்ள கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்காக வருகிறது. இந்த பூக்களை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

கடையடைப்பால் விலை சரிவு

கடந்த ஒரு மாதமாக சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததால் விலை குறைவாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடந்ததால் கீரமங்கலம் கமிஷன் கடைகளுக்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால் பூக்களின் விலை சரிந்தது.

அதாவது மல்லிகை, கனகாம்பரம் பூக்கள் கிலோ ரூ.100-க்கும், முல்லைப் பூ ரூ.70-க்கும், காட்டுமல்லிகை ரூ.30-க்கு, சம்பங்கி ரூ.10-க்கும் விற்பனை ஆனது. மேலும் விவசாயிகள் கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்த பூக்கள் முழுமையாக விற்பனை ஆகாமல் ஒவ்வொரு கமிஷன் கடையிலும் டன் கணக்கில் பூக்கள் தேக்கமடைந்துள்ளது.


Next Story