சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x

சேலம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சேலத்தாம்பட்டி ஏரி

சேலத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சிவதாபுரம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி ஏரி, நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நிரம்பி அதன் உபரிநீர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளியேறிவருகிறது.

இந்த உபரிநீரானது சிவதாபுரம் மெயின் ரோடு, அம்மன் நகர், மெய்யந்தெரு சாலை ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் அங்குள்ள வீடுகளில் உள்ளே புகுந்துள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடைகள் அடைப்பு

மேலும் சிவதாபுரம் மெயின் ரோட்டில் அதிகமான தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியில் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் கடைகளை அடைத்துள்ளனர். மேலும் அந்த சாலையில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அங்குள்ள கடைகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் மோட்டார் வைத்து வெளியேற்றும் அவல நிலை உள்ளது.

இது குறித்து அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இது போன்ற வெள்ள நீரால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம். சேலத்தாம் பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது சாலைகளில் தேங்கி வீடுகளில் புகுந்து விடுகிறது.

இதனால் இங்கு வசிப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிப்படைகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரி மழை தண்ணீர் சாலைகளில் மற்றும் வீடுகளுக்குள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நேற்று முன்தினம் இரவு ஓமலூர் மற்றும் ஏற்காடு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் உற்பத்தியாகி வரும் கிழக்கு சரபங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வட்டக்காட்டில் இருந்து சேலம் ரோடு மற்றும் தொப்பலாங்காடு பகுதியில் இருந்து சேலம்-ஓமலூர் ரோடு, காமலாபுரம் கிழக்குத்திக்காடு வழியாக சேலம் செல்லும் ரோடு என அனைத்து ரோட்டிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் தொப்பலாங்காடு, வட்டக்காடு, கோட்டைமேடு, குரமச்சிக்கரடு, சக்கரைசெட்டிபட்டி, கோபிநாதபுரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், கரும்பு, மஞ்சள், சோளம், வாழை உள்ளிட்ட விவசாய விளைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

மேலும் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் கிழங்குகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், சோளம் போன்ற விவசாய விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

மாற்று இடம்

இதேபோல் சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி வேலகவுண்டனூர் காலனி பகுதியில் உள்ள 13-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ராணி (வயது 40) என்பவர் வசித்து வந்த தகர அட்டை போடப்பட்ட குடிசை வீடு இடிந்து தரைமட்டமானது.

இது பற்றி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மழைநீரால் சூழப்பட்டிருந்த இருந்த 13 வீடுகளை சேர்ந்த 21 பேரை வேல கவுண்டனூர்அரசு தொடக்கப்பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். மேலும் அந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


Next Story