சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒரத்துப்பாளையம் அணை நீர்மட்டம் 19 அடியாக உயர்வு
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சென்னிமலை அருேக ஒரத்துப்பாளையம் அணை நீர்மட்டம் 19 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரத்துப்பாளையம் அணை
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்ததால் அணை நீர் மட்டுமின்றி அணையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் ஆற்றங்கரையின் இருபுறமும் உள்ள நீர் நிலைகள் பெரிதும் மாசுபட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அணையில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி அணையை தூர்வார வேண்டும் என்றும், அணைக்கு வரும் தண்ணீரில் முழுமையாக உப்புத்தன்மை நீங்கிய பிறகே அணை நீரை தேக்கி வைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்பிறகும் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் தொடர்ந்து கலந்து வந்ததால் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் அணை நிரம்புவதும் பின்னர் படிப்படியாக நொய்யல் ஆற்றில் தண்ணீரை வெளியேற்றுவதுமாக இருந்து வருகிறது.
19 அடியாக உயர்வு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 6-ந் தேதி அணையில் 4 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் 12.47 அடியாக இருந்தது. நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் நேற்று மாலை 4 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 19 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 23 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைக்கு முன்புறம் உள்ள தரைப்பாலம் மற்றும் சொக்கநாதபாளையம் அருகே உள்ள தரைப்பாலம் ஆகிய தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. இதனால் அந்்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.