நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின
நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின
அடுக்கம்பாறை
நாகநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 25 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வாழை மரங்கள்
மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கணியம்பாடி அருகே சிங்கிரிகோவில் அருகே செல்லும் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக கத்தாழம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.
அதேபோல் வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட எல்லையிலுள்ள ஜவ்வாது மலைத்தொடரில் பெய்த கனமழையின் காரணமாக வேலூர் அமிர்தி மிருகக்காட்சி சாலையில் அமைந்துள்ள கொட்டாறு அருவியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தரைப்பாலங்கள் மூழ்கின
மழை காரணமாக நாகநதி கமண்டல ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமிர்தி மிருகக்காட்சிசாலை அருகிலுள்ள 2 தரைப்பாலங்களும் நீரில் மூழ்கின. தரைப்பாலத்தின் மீது 3 அடிக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அமிர்தி வழியாகச் செல்லும் ஜவ்வாது மலைத் தொடரிலுள்ள ஜமுனாமரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமலை, வள்ளியூர், தானிமரத்தூர், கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருப்பதால் இந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் மீது செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தரை பாலத்தை கடக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் சிங்கிரிகோவில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியது.
விழிப்புணர்வு
எனவே ஆற்றில் குளிப்பது, விளையாடுவது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்வையிட வரும் பொதுமக்களிடம் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அமிர்தி வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.