கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பயிர்களும் மூழ்கின.

மயிலாடுதுறை
டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தஞ்சை, மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அதன் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அந்த உபரிநீர், கல்லணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீரால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிர்கள் மூழ்கின

மேலும், வெள்ள பாதிப்புகளை தடுக்கும்வகையில் மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு நேற்று மேலும் அதிகரித்ததால் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தோட்டப்பயிர்களான மல்லிகை, செவ்வந்தி பூக்கள் மற்றும் குறுவை நெற்பயிர், பருத்தி செடிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

செங்கல் உற்பத்தி பாதிப்பு

இதேபோல, இப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரால் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

படகில் சென்று பார்த்த எம்.எல்.ஏ.

மேட்டூர் அணையில் இருந்து உபரியாக திறக்கப்படும் தண்ணீர் கல்லணையை அடைந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கொள்ளிடம் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு, நாதல்படுகை, முதலை மேடு போன்ற பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் ஆகியோர் கொள்ளிடம், நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு ஆகிய பகுதிகளுக்கு படகில் சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டதோடு அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.



Next Story