குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையிலும் இந்த பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நேற்று பகல் சுமார் 12 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் அருவிக்கரையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அருவியில் இருந்து வெளியேற்றி குளிக்க தடை விதித்தனர்.

ஐந்தருவி

இதேபோன்று 12.15 மணிக்கு ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு போலீசார் கயிறு மற்றும் தடுப்புகள் வைத்தனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரை ரசித்தபடி சென்றனர்.

வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். எனினும் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story