ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு


ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
x

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருப்பதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக இருப்பதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உபரிநீர் திறப்பு

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் ஐந்தருவி, மெயின் அருவிகள் மூழ்கின. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

நீர்வரத்து தொடர்ந்து நீடிப்பு

இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதன் நீர்த்தேக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது. ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத முதல் நாளில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மன், தேசநாதஸ்வரர் கோவில்களில் தாலி கயிற்றை மாற்றி வழிபடுவார்கள். தற்போது ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார், சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியதால் இந்த ஆண்டு ஆடி முதல் நாள் களை இழந்து காணப்பட்டது.


Next Story