4 நாட்களாக குருசடை தீவு கடல் பகுதியில் காத்திருக்கும் மிதவை கப்பல், மீன்பிடி படகுகள்


4 நாட்களாக குருசடை தீவு கடல் பகுதியில் காத்திருக்கும் மிதவை கப்பல், மீன்பிடி படகுகள்
x

தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக 4 நாட்களாக பாம்பன் கடல் பகுதியில் மிதவை கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் காத்திருக்கின்றன.

ராமநாதபுரம்

பாம்பன்

தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக 4 நாட்களாக பாம்பன் கடல் பகுதியில் மிதவை கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் காத்திருக்கின்றன.

புயல் எச்சரிக்கை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

அதுபோல் மன்னார் வளைகுடாகடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1500-க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிறுத்தி வைப்பு

இதனிடையே பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக மராட்டிய மாநிலம் பெலத்தூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் செல்வதற்காக வந்த மிதவை கப்பல், பாம்பன் குருசடை தீவு அருகே உள்ள கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தூக்குப்பாலத்தை கடந்து நாகப்பட்டினம் செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும், பாம்பன் தென்கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் சின்னம் ஓய்ந்த பிறகு இந்த வாரத்தில் இந்த மிதவை கப்பலானது துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து செல்லலாம் என்று கூறப்படுகிறது.


Next Story