சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் பயணம்: நடுவானில் வங்கதேச பெண் பயணி மாரடைப்பால் சாவு


சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் பயணம்: நடுவானில் வங்கதேச பெண் பயணி மாரடைப்பால் சாவு
x

புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்த போது நடுவானில் வங்கதேச பெண் பயணி மாரடைப்பால் செத்தார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது அபு மற்றும் இவருடைய மனைவி குர்ஸிதா பேகம் (வயது 43) ஆகியோர் பயணம் செய்தனர். குர்ஸிதா பேகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவரை அழைத்து கொண்டு கணவர் முகமது அபு சென்னை வந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதில் துடித்தார். இதனால் பதற்றமடைந்த அவரது கணவர் முகமது அபு விமான பணிப்பெண்களிடம் தகவல் தெரிவித்தார்.

பணிப்பெண்கள் உடனே விமானிக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மருத்துவகுழுவினர் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் ஏறி பெண் பயணியை பரிசோதித்தனர். அப்போது இருக்கையில் மயக்க நிலையில் இருந்த குர்ஸிதா பேகம் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்.


Next Story