பலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிப்பு


பலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
x

பலத்த மழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த 10 விமானங்கள் பலத்த மழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. மழை நின்று வானிலை சீரானதும் வானில் வட்டமடித்து பறந்த விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், அபுதாபி உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

ஆகாஷா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சமூக வலைத்தளம் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமான நிறுவனம் தங்களுடைய விமானங்கள் இயக்கப்படும் பல்வேறு விமான நிலையங்களுக்கு அவசரமாக தகவல் அளித்து தீவிர சோதனைக்கு பிறகு விமானங்களை இயக்கும்படி அறிவுறுத்தியது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு மும்பைக்கு செல்ல இருந்த அந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்ய வந்த அனைத்து பயணிகளையும், அவர்களது உடமைகளையும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. விமானத்தையும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதனால் அந்த விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக இரவு 10 மணியளவில் 74 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு பெங்களூரு சென்று விட்டு பகல் 12.35 மணிக்கு மீண்டும் சென்னை திரும்ப வேண்டிய விமானமும், பகல் 2.10 மணிக்கு பெங்களூரு சென்று விட்டு மாலை 3.10 மணிக்கு சென்னை திரும்ப வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.


Next Story