சென்னையில் இருந்து அந்தமானுக்கு 16-ந் தேதி வரை விமான சேவை ரத்து


சென்னையில் இருந்து அந்தமானுக்கு 16-ந் தேதி வரை விமான சேவை ரத்து
x

ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து அந்தமானுக்கு நாளை (16-ந் தேதி) வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 5 முதல் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் பயணிகள் பெருமளவு அந்தமானுக்கு சென்று வந்தனர்.

அந்தமானில் தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவை சேர்ந்த ஏராளமானவா்கள் வசிப்பதால் அந்தமான் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கி விடும் என்பதால் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ முடியாது.

இதனால் அந்தமான் விமான நிலையத்தில் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவைகள் கிடையாது.

விமான சேவை ரத்து

இந்த நிலையில் அந்தமானில் விமான நிலைய பராமரிப்பு பணிகள் நடந்ததால் கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதி வரையும், 15-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரையும், மீண்டும் 19-ந் தேதியில் இருந்து டிசம்பர் 2-ந் தேதி வரையும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

தற்போது 4-வது முறையாக ஓடுபாதை சீரமைப்பு, பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று முன்தினம் முதல் நாளை (16-ந் தேதி) வரை 4 நாட்கள் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பயணிகளுக்கு தகவல்

இதனால் சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் சென்று வரும் விமான நிறுவனங்கள் தங்களுடைய விமான சேவைகளை வருகிற 16-ந் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் 17-ந் தேதியில் இருந்து அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்கும் என தெரிவித்து உள்ளன.

அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு, இதுபற்றி தகவல் தரப்பட்டு டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல் அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை விமான நிறுவனங்கள் செய்து கொண்டதாகவும், இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story