தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியதால் 543 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியதால் 543 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கம்
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும்.
தடைகாலம் தொடங்கியது
இந்த நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதாவது தூத்துக்குடி, வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 543 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள், படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதை சரி செய்வது, மீன் வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
மீன்கள் விலை உயர்வு
விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்பட்டு வரும் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
இதன் காரணமாக சீலா மீன் 1 கிலோ ரூ.1,000, விளைமீன் ரூ.500, பாறை மீன் ரூ.400, ஊளி மீன் ரூ.400, குறுவளை மீன் ரூ.300, கட்டா ரூ.200, சாளைமீன் கூடை ரூ.1,500-வரைக்கும் விற்பனையானது. சராசரியாக மீன்கள் கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனையானது. இனி வரக்கூடிய நாட்களில் மீன்கள் விலை பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது.